பொங்கல்

ஆண்டு முழுதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் அனைத்தையும்விட உயர்வானதாகச் சொல்லப்படுவது, பொங்கல் பண்டிகை

திருநாளின் ஆரம்பம் எது தெரியுமா?எப்படி துவங்கியது ?யார் துவக்கியது ?

பொங்கல் (ஈழத்து வழக்கு: புக்கை)

கோவர்த்தன கிரிதாங்கி நின்று கோபர்களை இந்திரனின் கோபமான மழையில் இருந்து காத்தான் கோபாலன். தேவராஜனை அன்று வரை வழிபட்ட அனைவரையும், பகலவனைப் பணியச் சொன்னான் பரந்தாமன். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன் ராம அவதாரத்திலேயே சூரிய வழிபாட்டைத் தொடங்கிவிட்டான் மாயோன்.

ராம, ராவண யுத்தத்தின்போது,ஸ்ரீ ராமச்சந்திரனுக்குத் தளர்ச்சியும் சோர்வும் ஏற்படாமல் இருக்க, கதிரோனை வழிபடச் சொன்னார் அகத்திய மாமுனி. ஆதித்ய ஹ்ருதயம் எனும் அற்புத மந்திரமும் உபதேசித்தார். அப்படியே செய்து ராவணனை வென்றார் ராமபிரான்.

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி. சாபவிமோசனமாக, நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டு நோய் நீங்கும் என்றார்.

. மார்கழியின் கடைசி நாளே இந்த விரதத்தின் கடைசி நாள்.

காவிரிபூம்பட்டிணத்தில் இருபத்து எட்டு நாட்கள் ‘மணிமேகலை ” எனும் பெயரில் இந்த விழா கொண்டாடப்பட்டதாக மணிமேகலை இலக்கியத்தில் விழாவறை காதையில் கூறப்பட்டுள்ளது

பழந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ‘ என்னும் தமிழர் மரபில் சிறப்புற்றிருந்த சூரிய வழிபாடு குறித்தும் சூரியக் கடவுளை ‘உச்சிக்கிழான்‘ என்று ஏத்திக் கூறியுள்ளது.

தென்திசையில் பயணிக்கும் பகலவன், வடதிசைக்கு மாறும் தைமாத முதல் நாளை உத்தராயன புண்யகாலம் என்கின்றன வேதங்கள். அந்தநாளில் சூரியனை வழிபடுவது, சூழ்வினைகளை சுட்டெரித்து வாழ்வினை வளமும் நலமும் நிறைந்ததாக ஆக்கும் என்பது ஐதிகம்..

 

 

 பொங்கல் வாழ்த்து:

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக!
பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்து பகைதணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!
நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!
வாழிய நலனே! வாழிய நிலனே!–(ஐங்குறுநூறு)

இந்த பாடலில் பொங்கல் என்று வரவில்லை என்றாலும், பொங்கல் அடையாளங்கள் அனைத்தும் விளங்கி வாழ்த்துக் கூறுவதைக் காண்கிறோம்

கங்கைகொண்ட  இராஜேந்திரசோழனின் காளத்திக் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற குறிப்பு உள்ளது எனச் சரித்திரச்செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார்

முதல் நாள் போகிப் பண்டிகை:

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது.போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.

மேலும் தகவல்களுக்கு   போகிப் பண்டிகை/காப்புக்கட்டு சொடுக்கவும்

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:

சங்கரணம் என்றால் நகர்தல் என்று பொருள். சூரியன் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை செய்யும் தனது தென்முகமான பயணத்தை வடதிசை நோக்கி மாற்றும் தை மாதத்தின் முதல் நாளில்தான் உத்தராயன புண்ய காலம் தொடங்குகிறது. தை மாதம் மகர ராசிக்குரியது. எனவே, இந்த நாளை மகர சங்கராந்தி என்று குறிப்பிடுகின்றனர்

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும்  கரும்பையும்  அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சங்க இலக்கியத்தில் தைப்பொங்கல்:

தைஇத் திங்கள் தண்கயம் படியும்நற்றிணை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” — குறுந்தொகை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” — குறுந்தொகை

தைஇத் திங்கள் தண்கயம் போல”– ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” –கலித்தொகை

மேலும் தகவல்களுக்கு தைப்பொங்கல் சொடுக்கவும்

 

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்/பட்டிப் பொங்கல் :

அன்று மாடுகள் கட்டும் கட்டுத்தரை சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் இயற்கை வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில்  சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு,கழுத்துக்கட்டி அணிவித்தும் தயார் செய்வார்கள்.

இதன் பின் பசு, காளை, எருமை,ஆடு,நாய்,பூனை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம்,கரும்பு கொடுப்பார்கள்.

‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல் / பூப் பொங்கல் :

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்

பிறந்தவளே இதை ஆரம்பிக்கவேண்டும் ,அப்பொழுது கண்ணுப்பிடி வைத்தேன், காக்காபிடி வைத்தேன், கூடப்பிறந்த பிறப்பெல்லாம் நன்றாக இருக்க வேண்டும், வயிற்றில் பிறந்த பிறப்பு வளமுடன் வாழ வேண்டும் என்று அந்த சூரிய நாராயணனைப் பிரார்த்திக்க வேண்டும்

கணுப்பிடி:

உடன்பிறந்த சகோதரர்களுக்காக பிறந்தவளே செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.

‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்று பழமொழியாகச் சொல்வதுண்டு.

 

கும்பகோணம் சூரியனார் கோவில்:

கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.சூரியனார் கோவிலை கி.பி. 1110-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான்.

கருப்பட்டி பொங்கல்:

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
பால் – 3 கப்
தண்ணீர் – 3 கப்
நெய் – அரை கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – தேவைக்கு
உலர் திராட்சை – தேவைக்கு

அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து அதனுடன் துருவிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

 

நன்மைகள் நாளும் சூழ்ந்திருக்க சூரியனை வேண்டுங்கள்!

மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாளில் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்கும்

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.